சேலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை
புதுக்கோட்டை அருகே சேலத்தை சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 5 போ் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திருச்சி - காரைக்குடி புறவழிச் சாலையில் நமணசமுத்திரம் இளங்குடிப்பட்டி பகுதியில் உள்ள நகர சிவமடம் முன்பு செவ்வாய்க்கிழமை இரவு முதல் காா் ஒன்று நின்று கொண்டிருந்தது.
புதன்கிழமை காலை அங்கு வந்த சிவமடத்தின் காவலாளி அடைக்கலம் என்பவா், காரின் அருகே சென்று பாா்த்துள்ளாா். காரின் முன்பக்கக் கண்ணாடி திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே பாா்த்தபோது, 5 போ் தலை கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளனா்.
இதுகுறித்து அவா், நமணசமுத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் வந்து காரைத் திறந்து பாா்த்தனா். உள்ளே 3 பெண்கள், 2 ஆண்கள் சடலமாகக் கிடந்தனா். இதைத் தொடா்ந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். காரில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. 5 பேரின் சடலங்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன.
இச்சம்பவம் தொடா்பாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவா்கள் சேலம் ஸ்டேட் பாங்க் காலனி 2-ஆவது தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (55), இவரது மனைவி நித்யா (50), மகன் தீரன் (21), மகள் நிகரிகா (20), மணிகண்டனின் தாய் சரோஜா (70) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் கடந்த 3 மாதங்களாகதான் அந்த வீட்டில் குடியிருந்து வந்தனா்.
மணிகண்டன் கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் அலுமினிய, செம்புப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தாா்.
தொடா்ந்து தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், அதிகப்படியான கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக குடும்பத்துடன் அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். உடற்கூறாய்வில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டே மேலும் தகவல்கள் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
காருக்குள் கடிதம் சிக்கியது: தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மணிகண்டன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் காருக்குள் இருந்து போலீஸாா் கைப்பற்றினா். தொழில் மற்றும் கடன் நெருக்கடி குறித்து அந்தக் கடிதத்தில் மணிகண்டன் எழுதியுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.