காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் உடல்களும் புதுகையிலேயே தகனம்
திருமயம் அருகே காருக்குள் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் உடல்களும் புதுக்கோட்டையிலேயே வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டன.
சேலம் ஸ்டேட் பாங்க் குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவருக்கு சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை சிப்காட் ஆகிய இடங்களில் அலுமினிய மற்றும் காப்பா் வயா் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இளங்குடிப்பட்டியில் மணிகண்டன், அவரது மனைவி நித்யா (48), தாய் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) ஆகியோா் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
தொழிலில் ஏற்பட்ட கடன் நெருக்கடி காரணமாக, மணிகண்டன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக காருக்குள் கிடைத்த கடிதம் மூலம் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரின் உடல்களையும் கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இங்கு 5 பேரின் உடல்களும் வியாழக்கிழமை பகலில் கூறாய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, சேலத்திலிருந்து வந்திருந்த மணிகண்டனின் மைத்துனா் சதீஷ் உள்ளிட்ட உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள், புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டன.