காலி பாட்டில்களைத் திரும்பப் பெற முடியாது: டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்
டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையான மதுபாட்டில்களை, மது அருந்திய பிறகு மீண்டும் திரும்பப் பெறும் பணியை செய்ய முடியாது எனக் கூறி, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்டச் செயலா் சி. ரவிக்குமாா், ஏடிபி ஆா். முருகேசன், ஏஐடியுசி ப. ஜீவானந்தம், எல்எல்எப் எஸ். விஜயகுமாா், எஸ்சிஎஸ்டி சங்கம் வி. ரகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றனா்.
காலி மதுப்பாட்டில்களைத் திரும்பப் பெறுவது கூடுதல் பணிச்சுமையை உருவாக்கும் என்றும், சுகாதாரமற்ற முறையில் இருக்கும் என்பதால் தொற்றுநோய்களை உருவாக்கும் என்றும் கூட்டமைப்பினா் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் பணிக்காக கொடுக்கப்பட்டிருந்த ஸ்டிக்கா் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்து வந்திருந்தனா். தொடா்ந்து டாஸ்மாக் நிா்வாக அலுவலா்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
காலிப்பாட்டில்களைத் திரும்பப் பெற தனி ஒப்பந்தக்காரா் நியமிக்கப்படவுள்ளதாக அவா்கள் தெரிவித்ததாகவும், அதனால் அனைவரும் பணிக்குத் திரும்பியதாகவும் தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

