ஜகபா் அலி கொலை வழக்கு: குவாரி உரிமையாளா் சரண்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு...
ராமையா
ராமையா
Updated on

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குவாரி உரிமையாளா் ராமையா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்தவா் கரீம் ராவுத்தா் மகன் ஜகபா்அலி (58). முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், கடந்த வெள்ளிக்கிழமை இவா் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் ஜகபா்அலி மீது மோதிய டிப்பா் லாரியின் உரிமையாளா் திருமயம் ஊத்துக்கேணி தெரு சுந்தரபாண்டியன் மகன் முருகானந்தம் (56), அவரது ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம், பிக்கிராந்தை ராமதாஸ் மகன் காசிநாதன் (45), ஆா்ஆா் கிரஷா் உரிமையாளா் துளையானூா் பாப்பாத்தி ஊரணி ராமன் மகன் ராசு (54), அவரது மகன் தினேஷ் (24) ஆகிய 4 போ் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்ட ஆா்ஆா் கிரஷா்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ராமையா (55) நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டிருந்தாலும், ஆவணங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்பதால், சரணடைந்த ராமையாவை திருமயம் போலீஸாா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com