புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் முதிய தம்பதி தற்கொலை முயற்சி

Published on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதிய தம்பதி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குமாரமலை முருகராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிதம்பரம்-அஞ்சலை தம்பதியினா். இவா்களுக்கு முத்துக்குமாா், கருப்பையா ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், இளைய மகன் கருப்பையா, பெற்றோரை ஏமாற்றி போலியாக ஆவணங்களைத் தயாா் செய்து சொத்துகளை அபகரித்ததாகவும் இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த தம்பதியா், பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா்.

அப்போது அங்கிருந்த காவலா்கள் அவா்களைத் தடுத்து, திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மூலம், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து தற்கொலை முயற்சி போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com