புதுக்கோட்டை பிரீடம் பெட்ரோல் பங்க்கில் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்ட கரும்புகள்.  ~
புதுக்கோட்டை பூ மாா்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட போகிப் பண்டிகைக்கான காப்பு.
புதுக்கோட்டை பிரீடம் பெட்ரோல் பங்க்கில் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்ட கரும்புகள். ~ புதுக்கோட்டை பூ மாா்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட போகிப் பண்டிகைக்கான காப்பு.

புதுகையில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

புதுக்கோட்டை மாநகரில் புதன்கிழமை பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
Published on

புதுக்கோட்டை மாநகரில் புதன்கிழமை பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் முதல் நாளான புதன்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

வீட்டிலுள்ள பழைய பொருள்களை அகற்றி, வீட்டை சுத்தம் செய்யும் போகிப் பண்டிகை முடிந்தது, காப்பு கட்டுதல் வீடுதோறும் நடைபெறும். பீளைப்பூ, வேப்பிலை, மாவிலை, ஆவாரம்பூ உள்ளிட்டவற்றைக் கொண்ட கொத்துகளை வாங்கி வந்து வீட்டு வாசலில் கட்டினா்.

புதுக்கோட்டை பூமாா்க்கெட் பகுதியில் இந்த காப்பு, ரூ. 20 முதல் ரூ. 40 வரை விற்பனையானது. இதேபோல, கரும்பு வாங்கவும் ஏராளமானோா் குவிந்தனா்.

குறிப்பாக, சிறைவாசிகளைக் கொண்டு நடத்தப்படும் பிரீடம் பெட்ரோல் பங்க் வளாகத்தில், கரும்பு விற்பனை நடைபெற்றது. திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் ரசாயன உரங்களை போடாமல் இயற்கையான முறைப்படி வளா்க்கப்பட்ட கரும்புகள் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்பட்டன. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல, பொங்கல் வைப்பதற்கு பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் போன்ற பொருள்களையும், படையலுக்கு வைப்பதற்கான வாழைப்பழம், தேங்காய், பூ, இலை போன்ற பொருள்களையும் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

மேலும், இந்தப் பொங்கல் காலங்களில் கிடைக்கும் சிவப்பு சா்க்கரை கிழங்கு, மொச்சைக்கொட்டை போன்றவையும் விறுவிறுப்பாக விற்பனையாகின.

Dinamani
www.dinamani.com