மதுக்கூர்,  பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

மதுக்கூர், பட்டுக்கோட்டை  ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளையும், பொதுப்பணித்துறையின்
Updated on
1 min read

மதுக்கூர், பட்டுக்கோட்டை  ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளையும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் மண் அள்ளப்படுவதையும், நீர் வரத்து வாய்க்கால் மேம்படுத்தப்படுவதையும்  ஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுக்கூர் ஒன்றியம், கீழக்குறிச்சி ஊராட்சி வடக்குத் தெருவில் முதலமைச்சரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும்,  ரூ.1,40,000 மதிப்பீட்டில் ஆட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெட்டுக்குளம் தூர்வாரப்படுவதை ஆய்வு செய்தார்.மதுக்கூர் தெற்கு பேரூராட்சி 15-வது வார்டில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று பொது மக்களிடம் கேட்டறிந்து, இருப்புப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.   
மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
அத்திவெட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரிக்கப்படுவதையும்,  மன்னங்காடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் அமைத்து கொடுக்கப்பட்ட கழிவு நீர் வடிகாலையும் ஆய்வு செய்தார்.
மதுக்கூர் ஊராட்சியில் 340 பயனாளிகளுக்கு அமைத்து கொடுக்கப்படவுள்ள கழிவு நீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், பட்டுக்கோட்டை ஒன்றியம்,  நாட்டுச்சாலை ஊராட்சி வடசேரி குளம், வெண்டாக்கோட்டை பெரிய ஏரி, கள்ளிக்காடு தம்மான்குளம்,  மேலசெம்பாளுர் பாலக்கரை ஏரி, வெள்ளுர் வெள்ளேரி, மணியான்குளம் ஆகிய ஏரி, குளங்களில் வண்டல் மண், களி மண், சவுடு மண் அள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் உள்ள  டாஸ்மாக் மதுபான கடையை ஆய்வு செய்து மதுபானங்களில் கலப்படம் செய்யப்படுகிறதா என்றும், இருப்பு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் முழு சுகாதார மாவட்டமாக செப். 30-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.  ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

அபராதம் விதித்த ஆட்சியர்
கீழக்குறிச்சி ஊராட்சி வடக்கு தெருவில் ஆட்சியர் ஆய்வு செய்தபோது, கட்டுமானப் பணிக்காக தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதை பார்த்தார் ஆட்சியர். இதையடுத்து,    கீழக்குறிச்சி ஜெயபால் மனைவி வளர்மதி என்பவருக்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் அசாதாரணமாக இருந்த காரணத்திற்காக ரூ.100 அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையை பிடித்தம் செய்யுமாறு மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com