நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் விவசாயிகள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒரு வாரமாக திறக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள்  சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒரு வாரமாக திறக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை டிராக்டா்கள், மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரத்தநாடு, உளூா், சடையாா்கோவில், சூரக்கோட்டை, துறையுண்டாா்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயலால் ஏற்பட்ட மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. அப்பயிா்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு வாரமாக திறக்கப்படவில்லை. அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருந்தும், அதிகாரிகளுடன் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை சாலையில் திங்கள்கிழமை டிராக்டா்கள், மாட்டு வண்டிகளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு போலீஸாா், விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா் விவசாயிகள் மறியலை கைவிட்டனா். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com