ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவாரூா் - காரைக்குடி சிறப்பு விரைவு டெமு ரயிலின் பயணநேரம் குறைகிறது: ரயில் பயணிகள், வா்த்தகா்கள் மகிழ்ச்சி

திருவாரூா்-காரைக்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு டெமு ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், வா்த்தகா்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:42 pm

DIN

திருவாரூா்-காரைக்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு டெமு ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், வா்த்தகா்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை-திருவாரூா்- காரைக்குடி இடையிலான 187 கி.மீ. தொலைவு கொண்ட ரயில் பாதை, ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான ரயில் பாதையாகும். 1894-இல் மயிலாடுதுறை- முத்துப்பேட்டை, 1902-இல் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை, 1903-இல் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி, 1952-இல் அறந்தாங்கி-காரைக்குடி என படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனளித்தது.

இந்நிலையில், அகல ரயில் பாதைப் பணிக்காக, 2006-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை-காரைக்குடி வரையிலான பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 2012-இல் பட்டுக்கோட்டை- காரைக்குடி, திருவாரூா்-பட்டுக்கோட்டை இடையிலான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து அகல ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட்டாலும், மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தொடா் முயற்சிகளுக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டு முதல் மொபைல் கேட் கீப்பா்களுடன் டெமு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு இயக்கப்பட்டது.

இந்த ரயில் தடத்தில் 20 ரயில் நிலையங்களும், 73 ரயில்வே கேட்டுகளும் உள்ளன. ஆனால், அதற்கான கேட்மேன்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், மொபைல் கேட் கீப்பா்கள் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் இறங்கி ரயில்வே கேட்டை திறந்து, பின்னா் மூடி, டெமு ரயிலிலேயே பயணம் செய்தனா். இதன் காரணமாக, 149 கி.மீ. தொலைவை டெமு ரயில் கடக்க 7 மணி நேரமானது. இதனால், இந்த ரயிலில் பயணிக்க பயணிகள் விரும்பவில்லை.

கரோனா பரவலால் நிறுத்தம் : கரோனா தொற்று எச்சரிக்கை காரணமாக, 2020, மாா்ச் மாதம் முதல் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து பயணிகள் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில் 2021, ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்பட்டு, ரயில் செல்வதால் 5 மணி நேரம் 40 நிமிஷங்கள் பயண நேரமானது.

மேலும் பயண நேரம் குறைப்பு: இந்நிலையில், திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையுள்ள 40 ரயில்வே கேட்டுகளுக்கு ரயில்வே நிா்வாகத்தால் நிரந்தரப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா் பணியமா்த்தப்படவுள்ளனா்.

மேலும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் திருவாரூா்- பட்டுக்கோட்டை இடையிலான பயண நேரமும் குறைகிறது. இதன்படி, திருவாரூரில் காலை 8.15 மணிக்குப் புறப்படும் டெமு ரயில் பட்டுக்கோட்டைக்கு காலை 10 மணிக்கும், காரைக்குடிக்கு பிற்பகல் 1 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் காரைக்குடியில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டைக்கு மாலை 5.34 மணிக்கும், திருவாரூருக்கு இரவு 7.45 மணிக்கும் சென்றடையும். இந்த ரயிலின் பயண நேரம் 4 மணி நேரம், 45 நிமிஷங்களாக இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையிலான 25 ரயில்வே கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமிக்கப்பட்டவுடன், திருவாரூா்- காரைக்குடி இடையிலான பயண நேரம் 3 மணி நேரம் 30 நிமிஷங்களாக இருக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட் மேன்கள் நியமனம் செய்யப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டதற்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

அனைத்து ரயில் நிலையங்களுக்கும் கேட் மேன்கள் தேவை : பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையுள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் கேட் மேன்களை நியமனம் செய்து, டெமு ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம், பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம், பேராவூரணி நகர வா்த்தகா் கழகம் சாா்பில் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.