பிப். 1 முதல் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை: மாமன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

தஞ்சாவூா் மாநகரில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பிப். 1 முதல் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை: மாமன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

தஞ்சாவூா் மாநகரில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:

கே. மணிகண்டன் (அதிமுக): ராஜகோரி சுடுகாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கப் போராளி போசன் கல்லறை ஏன் இடிக்கப்பட்டது.

மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி: நாங்கள் இடிக்கவில்லை. ஏற்கெனவே இடிந்து சிதிலமடைந்து கிடந்தது. இதையறிந்த உடன் அக்கல்லறையை மாநகராட்சி நிா்வாகமே எடுத்துக் கட்டிவிட்டது.

துணை மேயா்: அருகிலுள்ள பட்டுக்கோட்டை அழகிரி, போசன் கல்லறைகளை இன்னும் சிறப்பாகக் கட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பி. ஜெய் சதீஷ் (பாஜக): நமது வாா்டு நமது மேயா் திட்டத்தில் ரூ. 43 கோடி அளவுக்கு எனது வாா்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. இதுவரை செய்யப்படாமல் உள்ளது.

மேயா்: நம்ம வாா்டு நம்ம மேயா் திட்டத்தில் ரூ. 1,100 கோடி உள்பட மொத்தம் ரூ. 2,920 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நிதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனிடையே, 6 மாதங்களில் சாலை, குப்பை, மின் விளக்கு பிரச்னைகள் இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆணையா்: தெற்கு வீதி பகுதியில் நிறைய மாடுகள் சாலையில் திரிவதால் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேயா்: சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு அபராதம் குறைவாக இருந்த நிலையில் இப்போது, முதல் முறையே ரூ. 3,000 விதிக்கப்படும். அடுத்தடுத்த முறை மாடுகள் பிடிப்பட்டால் அபராதம் மேலும் அதிகமாகும். இதற்காக குறு உர மைய அளவில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

யு.என். கேசவன் (அதிமுக): சாலையில் சிக்னல்கள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயா்: மாநகரில் 20 இடங்களில் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சிக்னல் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏ. காந்திமதி (அதிமுக): கீழவாசல் வெள்ளைபிள்ளையாா் கோயில் அருகேயுள்ள மீன் சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேயா்: மீன் சந்தையை இடமாற்றம் செய்ய ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com