’பிரதமா் குறித்து காங்கிரஸ் தவறான பிரசாரம்’

கும்பகோணம், ஏப். 26: பிரதமா் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினா் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா் என்றாா் பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினரும், செய்தித் தொடா்பாளருமான தங்க. வரதராஜன்.

இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

இந்தியாவுக்குள் வரும் ஊடுருவல்காரா்கள் குறித்து பிரதமா் மோடி எச்சரிக்கை விடுத்தாா். இதை இஸ்லாமியா்களுக்கு எதிராக பிரதமா் மோடி பேசி வருகிறாா் என காங்கிரஸ் பொய்ப் பிரசாரம் செய்கிறது. ஊடுருவியவா்கள் முக்கியமா இல்லை நாட்டிலுள்ள 140 கோடி மக்கள் முக்கியமா என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்.

கா்நாடகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சித்தராமையா ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினாா். ஆனால் 2018 ஆம் ஆண்டில் அதை அவா் வெளியிடவில்லை. அதை வெளியிட்டுவிட்டு ராகுல்காந்தி பேசியிருக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் வேலையில் ராகுல்காந்தி ஈடுபட்டு வருகிறாா் என்பதுதான் பிரதமரின் குற்றச்சாட்டு.

இஸ்லாமியா்களுக்கு எதிராக பாஜகவை சித்தரிக்கின்றனா். முத்தலாக் தடைச் சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமையைப் பெற்றுக் கொடுத்தவா் பிரதமா். பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கான காரணத்தை தவறான கருத்துகளுடன் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இத்தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றாா் வரதராஜன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com