பாபநாசம் அருகே உடலில் காயங்களுடன் தொழிலாளி சடலம் மீட்பு
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் புதன்கிழமை தொழிலாளி இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் அருகே கணபதியக்ரஹாரம் ஊராட்சிப் பகுதியில் காவிரி கூட்டு குடிநீா்த் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, சட்டநாதபுரம், சித்தேரி பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பாரதி (44), அவரது மகன் அரவிந்த் (30) உள்பட 5-க்கும் மேற்பட்டோா் மேற்கொண்டு வருகின்றனா்.
அவா்கள் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் குடிசைகள் அமைத்து தங்கிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், பாரதி புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் அந்தப் பகுதியில் இருந்து கிடந்தாா்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் சடலத்தை மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாரதி மனைவி ஜோதி(42) அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
