திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலையில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65 அடி உயர கொடியேற்று விழாவில் அவர் மேலும் பேசியது: அடுத்து வருகிற தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. இந்த இயக்கத்தைச் சிலர் அழிக்கவும், முடக்கவும் பார்த்த நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன் அத்தனையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சியில் உழைக்கிற சாதாரண தொண்டர்கள் கூட நிச்சயமாக உச்ச நிலையை அடைவர். இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்ட இயக்கம் அதிமுகதான். எனவே மக்களின் துணையுடன் அதிமுக நிச்சயமாக ஆட்சிக்கு வரும்.

எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணியை ஜெயலலிதா செய்தார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை ஜெயலலிதா அரசு செய்தது. இடையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகள் 8 மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 100 சதவீதமும் நிறைவேற்றிவிட்டதாகத் தமிழக முதல்வர் பொய்யைச் சொல்லி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து வருகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக முதல்வர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார். தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கலாம். ஆனால் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்லாமல் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். 

காவிரி டெல்டா மாவட்டம் முப்போகம் விளைகிற பூமியாக இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். ஆனால் திமுக ஆட்சியில் நீர் ஆதாரத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிகழாண்டு 3 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நட்டத்துக்கு ஆளாகினர். ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அதிமுக ஆட்சியில் ரூ. 20 ஆயிரம் கொடுக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 17 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், திமுக அரசு ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே கொடுத்தது. 

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலையில் ஏற்றப்பட்ட 65 அடி உயர அதிமுக கொடி.

மேட்டூர் அணை திறந்து விடப்படாததால், தற்போது சம்பா, தாளடி பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. மத்திய மற்றும் கர்நாடக அரசுகளிடம் போராடி, வாதாடி நமது பங்கு நீரைப் பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாராளமாக தண்ணீர் கிடைத்து நல்ல விளைச்சலை பெற வேண்டிய விவசாயிகளுக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அதையும் இந்த அரசு வழங்கவில்லை.

இன்றைய அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. விவசாயத்துக்கு அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் கொடுக்கப்பட்ட மும்முனை மின்சாரமும் இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. எந்த நேரம் மின்சாரம் தடைபடும் என்ற அச்சத்தில்தான் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்யாத அரசாகவே திமுக அரசு உள்ளது. எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com