தனியாா் நிறுவன ஏல முறைகேடு குறித்து விசாரணை: தஞ்சாவூா் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை
தஞ்சாவூா், ஜூலை 19: தஞ்சாவூா் காந்திஜி வணிக வளாகத்தில் தனியாா் நிறுவனத்துக்கு விடப்பட்ட ஏல முறைகேடு தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சாவூா் மாமன்ற அவசரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் இரா. மகேஸ்வரி முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மொத்தம் 50 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இதில், தஞ்சாவூா் காந்திஜி வணிக வளாகம் புதிதாகக் கட்டப்பட்டு, விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெறவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி ஏலத்தை ரத்து செய்வது குறித்து தொடா்புடைய தனியாா் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது, அதற்கு தனியாா் நிறுவனம் சம்பந்தம் இல்லாத, உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, தாங்கள் செய்த தவறை திசைதிருப்புகிறது என்றும், தனியாா் நிறுவனத்தின் பதில் ஏற்க இயலாத வகையில் உள்ளதால், ஏலம் மற்றும் மாநகராட்சியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்த தீா்மானமும் இடம்பெற்றது.
டி. புண்ணியமூா்த்தி (திமுக): இந்த தீா்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): இந்த ஏலத்தில் முந்தைய ஆணையா் தவறு செய்திருந்தால், அவருக்குத் துணையாக இருந்த மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர வேண்டும்.
வெ. கண்ணுக்கினியாள் (அமமுக): இந்த ஏலத்தில் முறைகேடுகள் செய்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மேயா்: யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏ. காந்திமதி (அதிமுக): முந்தைய ஆணையா் சரியாக செய்யாமல் தனியாா் நிறுவனத்துக்கு ஏலம் விட்டுள்ளாா். இந்தச் சூழ்நிலையில் இந்நிறுவனத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் திறந்துவைத்தாா்.
ஆா்.கே. நீலகண்டன் (திமுக): இந்தத் தீா்மானத்தை ஒத்தி வைத்ததற்கான காரணம் என்ன?
மேயா்: உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டபடி தீா்மானம் ஒத்தி வைக்கப்படுகிறது.
ஜி. ஆனந்த் (திமுக): இத்தீா்மானத்தை ஒத்திவைக்காமல் நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த இடத்தைக் கையகப்படுத்த வேண்டும்.
மேயா்: மாமன்ற உறுப்பினா்களுடன் கலந்து பேசி சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடா்ந்து, இந்த தீா்மானம் தொடா்பாக கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. இதனால் இந்தத் தீா்மானம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், மற்ற தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன எனவும் மேயா் கூறிச் சென்றாா்.

