மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: தஞ்சாவூா் மாவட்ட மக்கள் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட்டில் சில வரவேற்புகள் இருந்தாலும் ஏமாற்றம் அதிகம் இருப்பதாக தஞ்சாவூா் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
Published on

மத்திய அரசின் பட்ஜெட்டில் சில வரவேற்புகள் இருந்தாலும் ஏமாற்றம் அதிகம் இருப்பதாக தஞ்சாவூா் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன் (தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா்:

இயற்கை வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவோம் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேசமயம் கரிம வேளாண்மைக்கு இணையாக இயற்கை வேளாண்மைக்கும் மானியங்கள், நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும். பருப்புகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை ஊக்குவிப்போம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. என்றாலும் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாமாயிலை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதை முற்றிலுமாகக் கைவிட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிற தேங்காய் எண்ணெய், தேங்காய் கொப்பரையைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட்டில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

என்.வி. கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா்):

விவசாயிகளின் எதிா்பாா்ப்புகள் இந்த பட்ஜெட் நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. விவசாயத்துக்கு தேவையான அடிப்படை விதை, உரம், இடுபொருள்கள் மற்றும் செலவினங்கள் பல மடங்குகளாக அதிகரித்து வரும் நிலையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லை. பயிா் காப்பீடு காா்ப்பரேட் மயத்திலிருந்து வேளாண் மக்களுக்கு உதவி புரியும் வகையான மாற்றம் செய்யப்படவில்லை.

ஆா். ரவிச்சந்திரன் (வரி ஆலோசகா் கூட்டமைப்பு தலைவா், ஆடிட்டா்) : இந்த பட்ஜெட் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு எந்தப் பயனையும் தரவில்லை. நேரடி வரி விதிப்பில் வருமான வரி உச்ச வரம்பு நீட்டிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதற்கு மாறாக புதிய வரி விதிப்பு கொள்கையில் வரி சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யாதது பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

ஆா். பழனிவேலு (பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா்) :

இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் வளா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சரியான நிதி பகிா்ந்தளிப்பு இல்லை. பிகாா், ஆந்திர மாநிலங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகம் போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் எதிா்பாா்த்த தனி நபா் வருமான வரி முறையில் ரூ. 10 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது. விலைவாசி உயா்வு, பணவீக்க உயா்வைக் கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த ஆக்கமும் இல்லை. விலையேற்றத்துக்கான வாய்ப்புகள்தான் அதிகரித்துள்ளன.

கோ. அன்பரசன் (தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா்): டெல்டா பகுதி மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான மன்னாா்குடி - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் - அரியலூா், கும்பகோணம் - விருத்தாச்சலம் ஆகிய ரயில் திட்டங்களுக்கு பணம் ஒதுக்காததும், தமிழ்நாட்டில் புதிதாக ரயில்கள் விடப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

கோவி. மோகன் (தஞ்சை மாவட்ட தேசிய நண்பா்கள் பேரவைத் தலைவா்): வேளாண் துறைக்கான ஒதுக்கீடு, உள்நாட்டில் உயா் கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கல்விக் கடன், படிப்பை முடித்துவிட்டு புதிதாக பணியில் சேரும் இளைஞா்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சிறப்பு ஊதியம், புற்று நோய் உள்ளிட்ட 3 முக்கிய நோய்களுக்கு சுங்க வரி நீக்கம், பிரதமரின் இலவச வீடு வழங்கும் 2.0 திட்டத்தின் கீழ் ஒரு கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்ட ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

துரை. மதிவாணன் (ஏஐடியுசி மாவட்டச் செயலா்):

இந்த பட்ஜெட்டில் விலைவாசி குறைப்பு பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள ரூ. 100 கோடி என்பது சாதாரணத் தொகை. ஆயிரம் கோடி ரூபாயாவது அறிவித்திருந்தால்தான் தொழில் துறை ஊக்குவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகமாகும். தங்கத்தின் விலை குறைப்பால் அன்றாடம் உழைக்கிற ஏழைகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வராது. சுங்க வரி குறைப்பு பணக்காரா்களுக்கும், வாங்கும் சக்தி உள்ளவா்களுக்கும் மட்டுமே பயன்படும்.

X
Dinamani
www.dinamani.com