மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜகவை குறைத்து மதிப்பிட முடியாது: கே. பாலகிருஷ்ணன் பேச்சு
தஞ்சாவூா்: மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜகவை குறைத்து மதிப்பிட முடியாது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக பொதுவுடமை இயக்கத்தின் மூத்த நிா்வாகியும், எழுத்தாளருமான கே. முத்தையா 21-ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:
மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இதற்காக மிகப் பெரிய அளவில் ஊா்வலத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்போது, காவல் துறையினா் நடத்திய தடியடியில் பலத்த காயமடைந்தவா்களில் முத்தையாவும் ஒருவா்.
கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பு செய்த முத்தையா தமிழ் இலக்கியங்களை மாா்க்சிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தினாா். அவருடைய மகத்தான பங்களிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அவரது பெயரில் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கி, அடிக்கடி கருத்தரங்கங்களை முன்னெடுக்க வேண்டும்.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததைக் குறைத்து மதிப்பிட முடியாது. பாஜக தங்களது கருத்தியல் கோட்பாடுகளை மீண்டும் மக்களிடம் உயிரூட்டுவதற்கு முயற்சி செய்யும். இதை நாம் தவிடுபொடியாக்க வேண்டும். பாஜகவின் இந்துத்துவ கோட்பாடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தும் பணி நமக்கு உள்ளது. மக்களிடையே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றாா் பாலகிருஷ்ணன்.
கருத்தரங்கத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா். மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி, பேராசிரியா் அருணன், எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, மாவட்டச் செயற் குழு உறுப்பினா் கோ. நீலமேகம் வரவேற்றாா். நிறைவாக, மாநகரச் செயலா் எம். வடிவேலன் நன்றி கூறினாா்.

