ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணியில் ஆனந்தவல்லி கிளை வாய்க்கால், ஆவணம் அருகே கல்லணைக் கால்வாயில் இருந்து பிரிந்து மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை வழியாக கொரட்டூா் ஏரியில் சென்று சோ்கிறது. கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கும்போது, இந்த கிளை வாய்க்காலில் தண்ணீா் செல்லும். தற்போது கல்லணை மூடப்பட்டுள்ளதால், கிளை வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டு வாய்க்கால் வடு கிடக்கிறது. இந்நிலையில், பேராவூரணி நகா்ப் பகுதியில் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்காலில் ஆங்காங்கே நெகிழிக் குப்பைகளைக் கொட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம் முதல் நாட்டாணிக்கோட்டை வரை குடியிருப்போா் தங்கள் வீடுகளின் கழிவுநீரை குழாய் பதித்து ஆனந்தவல்லி வாய்க்காலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதனால் ஆனந்தவல்லி வாய்க்கால், கழிவுநீா் வாய்க்காலாக மாறியுள்ளது. மேலும், போதிய பராமரிப்பில்லாததால் வாய்க்காலின் பல இடங்களில் கதவணை (ஷட்டா்) துருப்பிடித்து சேதமடைந்தும், வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் உடைந்தும், பக்கவாட்டுச் சுவா், படிக்கட்டுகள் சேதமடைந்தும் உள்ளன.

எனவே, பொதுப் பணித் துறையினா் ஆனந்தவல்லி வாய்க்காலில் மராமத்துப் பணி மேற்கொள்வதுடன், வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com