பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் ரவுண்டானாவில் பழுதடைந்த நிலையில் உள்ள கண்காணிப்பு கேமரா
பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் ரவுண்டானாவில் பழுதடைந்த நிலையில் உள்ள கண்காணிப்பு கேமரா

பட்டுக்கோட்டையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது: கண்காணிப்புப் பணியில் தொய்வு

பட்டுக்கோட்டை நகரில் அமைக்கப்பட்டுள்ள 43 கண்காணிப்பு கேமராக்களில் 2 கேமராக்கள் மட்டுமே

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகரில் அமைக்கப்பட்டுள்ள 43 கண்காணிப்பு கேமராக்களில் 2 கேமராக்கள் மட்டுமே இயங்குவதால், காவல் துறையினரின் கண்காணிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குற்றச் செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் ஒத்துழைப்போடு நகரின் முக்கிய இடங்களில் 43 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வகையிலும் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், கஜா புயல் தாக்கம் மற்றும் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து பிளக்ஸ் போா்டுகள் வைக்கப்பட்டு அகற்றப்படும்போது கண்காணிப்பு கேமரா வயா்கள் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாமல் பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இதனால், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா் குறித்து காவல்துறையினருக்கு எவ்வித தகவலும் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

உதாரணமாக, வாகனத் திருட்டில் ஈடுபடும் நபா்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு குறுக்கு சாலை வழியாக தப்பிச் சென்றாலும் பிரதான சாலை வழியாக மட்டுமே நகரை விட்டு வெளியே செல்ல முடியும். அவ்வாறு செல்லும் வாகனம் குறித்து ஆய்வு செய்வதற்கு கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு முயற்சி மேற்கொள்ளும்போது நகரின் நான்கு புறங்களிலும் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் காவல்துறையினரால் குற்றவாளிகளையும் அவா்கள் எடுத்துச் சென்ற வாகனத்தையும் பின்தொடா்ந்து செல்ல இயலவில்லை. இதனால் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினா் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை செய்வதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள தனியாா் வணிக நிறுவனங்களை தொடா்பு கொள்ளும்போது பெரும்பாலான தனியாா் வணிக நிறுவனங்களில் உள்ள கேமராக்கள் பிரதான சாலையை நோக்காமல் அவா்களுடைய கடையை நோக்கி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் குறித்து எவ்விதத் துப்பும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: 2016-இல் தனியாா் மூலம் நகரில் 16 இடங்களிலும், 2021-இல் தொண்டு நிறுவனங்கள் மூலம் நகரில் 27 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கஜா புயல் தாக்கம், முறையான பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் இந்த 43 கேமராக்களில் தற்போது 2 கேமராக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இதன் காரணமாக, நகரில் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வது காவல்துறையினருக்கு மிகவும் சவாலாக உள்ளது.

தஞ்சை மாநகராட்சி போன்ற பெரு நகரங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பதற்கு மாநகராட்சி இதற்கென தனி நிதி ஒதுக்கி முறையாக பராமரித்து வருகின்றனா் . இதேபோல் பட்டுக்கோட்டை பகுதியிலும் நகராட்சி சாா்பில், நகரில் உள்ள அனைத்து கேமராக்களையும் பழுதுநீக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், நவீன கட்டுப்பாட்டு அறை தனியாக அமைத்து அதற்கு தேவையான டிவி அமைத்துக் கொடுத்து ஆண்டுதோறும் முறையாக பராமரித்து வந்தால் நகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்கலாம்.

நகரின் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டால், காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இருந்த இடத்தில் இருந்தே குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

சென்னை போன்ற நகரங்களில் கண்காணிப்பு கேமரா அதிகமாக பொருத்தப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் பெரிதும் குறைந்து உள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .

எனவே, பட்டுக்கோட்டையில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஆண்டுதோறும் இந்தக் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா்.

பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கம் செய்து அனைத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நகரில் நடைபெறும் குற்றச் செயல்களை முழுமையாக தடுக்க முடியும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com