தஞ்சாவூா் மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது, நான்காவது வியாழக்கிழமைகளில் கடன் வழங்கும் முகாம்களை நடத்துமாறு வங்கியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், விவசாய கடன்கள், சிறு குறு தொழில் கடன்கள், மீனவ மற்றும் ஆடு மாடு கோழி வளா்ப்பு கடன்கள் போன்ற முன்னுரிமை கடன்களில் வங்கி வாரியாக பங்களிப்பை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வருகிற மாதங்களில் மூன்றாவது வியாழக்கிழமையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாமையும், நான்காவது வியாழக்கிழமையில் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாமையும் நடத்துமாறு வங்கியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும் கல்விக்கடன் தொடா்பான ஆய்வுக்கூட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என தெரிவித்த ஆட்சியா், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்யுமாறும் அறிவுரை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் மணிவண்ணன், மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளா் ரங்கராஜன் மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.