பள்ளி மாணவரை தாக்கி கடத்தல்: காவல் துறையினா் விசாரணை
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை பள்ளி மாணவரை தாக்கி கடத்திச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் தெற்கு வீதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்வதற்காக வெளியே வந்தாா். அப்போது, இவரைப் பள்ளிக்கு அருகே காத்திருந்த அடையாளம் தெரியாத 6 போ் தாக்கி, தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனா். இதையறிந்த பள்ளி ஆசிரியா்கள் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதன்பேரில் காவல் ஆய்வாளா்கள் கலைவாணி (மேற்கு), சுதா (தெற்கு) உள்ளிட்டோா் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.
இதனிடையே, கடத்தப்பட்ட மாணவரின் பெற்றோா், உறவினா்கள் பள்ளிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இவா்களிடம் காவல் துறையினா் பேசி சமாதானப்படுத்தினா்.
இந்நிலையில், இரவு 7 மணியளவில் கடத்தப்பட்ட மாணவா் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு, அவா் வீட்டுக்கு வந்து சோ்ந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கு காவல் நிலையத்தினா் விசாரித்து, கடத்தியவா்களைத் தேடி வருகின்றனா். இச்சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
