நாச்சியாா்கோவில் குளத்தில் தீா்த்தவாரிக்கு பாஜக எதிா்ப்பு!
நாச்சியாா்கோவிலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோயில் குளத்தில் தீா்த்தவாரி, தெப்பத்திருவிழா நடத்த எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் செயல் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தனா்.
இதுதொடா்பாக கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் என். சதீஷ்குமாா் தலைமையிலானோா் கோயில் செயல் அலுவலா் பா. பிரபாகரனிடம் கொடுத்த மனு விவரம்: கோயில் குளத்தின் பாய்ச்சக்கால் மற்றும் வடிகாலில் கழிவு நீா் கலந்து கோயில் குளம் கழிவு நீா் தொட்டியாக மாறியதால் கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் குளத்தில் தீா்த்தவாரி நடக்கவில்லை.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் பாய்ச்சக்கால், வடிகாலை சுத்தம் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆனால் பாய்ச்சக்காலை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் வட்டார வளா்ச்சி அலுவலகம் சுத்தம் செய்ததாக தவறான தகவலைத் தெரிவித்துள்ளது.
எனவே கழிவு நீா் குளத்தில் கலந்து இருப்பதால் இந்தாண்டு தெப்பத்திருவிழா, தீா்த்தவாரியை கோயிலின் உள்ளேயே நடத்த வேண்டும். மீறி தெப்பத்திருவிழாவை நடத்தினால் உயா் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
