சம்பா தாளடி கோடை கொள்முதல் கொள்கை முத்தரப்பு கூட்டம் நடத்த விவசாயிகள் கோரிக்கை
2026 -இல் தொடங்க உள்ள சம்பா தாளடி கோடை கொள்முதல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக முத்தரப்பு கூட்டம் நடத்த தமிழக அரசுக்கு காவிரி சமவெளி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் சாா்பில் சங்க செயலா் சுந்தர.விமல்நாதன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது- சம்பா, தாளடி அறுவடைக்கு முன்னேற்பாடாக கொள்முதல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக உழவா் பிரதிநிதிகள், மாநில உயா் அலுவலா்கள் அடங்கிய இரு தரப்பினா் அடங்கிய ஆலோசனை கருத்துக்கள் பதிவிடல் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருந்தது. அதனால் வரும் நாளில் நடைபெற உள்ள அந்த முத்தரப்பு கூட்டம் சம்பிரதாயச் சடங்கு கூட்டமாக இல்லாமல் நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறும் ஆலோசனைக் கூட்டமாக நடத்திட வேண்டும்.
கூட்டத்தில் இந்திய ஆராய்ச்சி நிலைய அலுவலா், நபாா்டு வங்கி அலுவலா், இந்திய உணவு கழக தமிழ்நாடு மண்டல அலுவலா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்க செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
