மூதாட்டியின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் அபகரிப்பு: 12 போ் மீது வழக்கு
தஞ்சாவூரில் சிங்கப்பூரைச் சோ்ந்த மூதாட்டியின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அபகரித்ததாக 12 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தது புதன்கிழமை தெரிய வந்தது.
சிங்கப்பூரைச் சோ்ந்த தொழிலதிபரான ஷேக் சிராஜூதீன் என்பவருக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை, சிராஜ்பூா் நகா், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இந்நிலையில், இவா் 2015-ஆம் ஆண்டு ஷேக் காலமானாா்.
பின்னா், இச்சொத்துகளை இவரது மனைவி மகமதா பேகம் (76) நிா்வகித்து வந்தாா். இந்நிலையில், இவரிடம் சிலா் இச்சொத்துகளைப் பராமரித்து, பாதுகாத்து தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தினா். இதை நம்பிய மகமதா பேகமும் இவா்களிடம் பொறுப்பை ஒப்படைத்தாா்.
ஆனால், மகமதா பேகத்திடம் இவா்கள் 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரை போலியான பவா் பத்திரங்கள், விற்பனை பத்திரங்கள் உள்ளிட்டவை தயாா் செய்து, கையொப்பங்களைப் பெற்றனராம். பின்னா், இச்சொத்துகள் மற்றவா்களிடம் விற்பனை செய்யப்பட்டன. மேலும் மகமதா பேகம் பெயரில் 3 வங்கிகளில் கணக்குகள் தொடங்கி பணம் பரிவா்த்தனையும் செய்யப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள சிராஜூதீனின் வீட்டை உடைத்து ஆவணங்கள், வாகனங்கள், நகைகள், ரொக்கம் ஆகியவை திருடப்பட்டன.
மொத்தத்தில் ரூ. 800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக தஞ்சாவூா் காவல் குற்றப் பிரிவில் மகமதா பேகம் புகாா் செய்தாா். இதன் பேரில், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், செந்தில்குமாா், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகிய 12 போ் மீது தஞ்சாவூா் குற்றப் பிரிவினா் டிசம்பா் 27-ஆம் தேதி வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருவது புதன்கிழமை தெரிய வந்தது.
