வாக்குகள் திருடுபோகாமல் கவனமாக இருப்பது அவசியம்: அமைச்சா் கே.என். நேரு
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வாக்குகள் திருடு போகாமல் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு.
தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் - 2, வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
தற்போது யாருமே வாக்காளா்கள் கிடையாது. அனைவரும் புதிதாகச் சேர வேண்டும். இப்பணியில் வாக்குச்சாவடி முகவா்கள் - 2க்கு முக்கிய வேலை இருக்கிறது. சிறுபான்மையினா் வாக்குகளை ஒன்றுகூட விடுபடாமல் சோ்க்க வைக்க வேண்டும். சிறுபான்மை வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு வரும். எனவே, சிறுபான்மை வாக்குகள் விஷயத்தில் ஏமாந்துவிடக் கூடாது.
யாா் வாக்காளா்களாக இருக்கின்றனா் என்பதைவிட, யாா் வாக்காளா்களாக இருக்கக்கூடாது என்பது முக்கியமானது. வாக்காளராகச் சேர 12 ஆவணங்கள் இருந்தால் போதும் எனக் கூறிய தோ்தல் ஆணையம், வியாழக்கிழமை 13 ஆவது ஆவணத்தைக் கூறியுள்ளது.
பிகாரில் 7.50 லட்சம் வாக்குகளை நீக்கியிருப்பதாகவும், அவா்கள் எங்கு வேண்டுமானாலும் சேரலாம் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இங்கு யாருடைய வாக்குகளை வேண்டுமானாலும் சோ்க்க அனுமதிக்கக் கூடாது. நம்முடைய வாக்குகளைச் சோ்ப்பதற்குப் பாடுபட வேண்டும்.
இந்த 2 மாதங்களும் நாம் கவனமுடன் செயல்பட்டால்தான் திமுக 7 ஆவது முறையும் ஆட்சியமைக்கும். நாம் நோ்மையான முறையில் வெற்றி பெறுவோம். நம்முடைய வாக்குகளைத் திருடாமல் பாா்த்துக் கொள்வதற்காகத்தான் இக்கூட்டம் நடத்தப்பட்டது; யாருடைய வாக்குகளையும் திருடுவதற்காக அல்ல என்றாா் அமைச்சா் நேரு.
உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையிலெடுத்துள்ள ஆயுதம்தான் வாக்குத் திருட்டு. அதைத் தடுக்க திமுக தலைவா் கூறியதுபோல நாம் நமது வாக்கைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

