கமல்ஹாசன்
கமல்ஹாசன்கோப்புப் படம்

மாற்று அரசியலான பாசிசம் வேண்டாம்: கமல்ஹாசன்

மாற்று அரசியல் என்றாலே பாசிசம் என்பதால், அது எங்களுக்கு வேண்டாம் என்றாா் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன்.
Published on

மாற்று அரசியல் என்றாலே பாசிசம் என்பதால், அது எங்களுக்கு வேண்டாம் என்றாா் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதி புதுக் கரியப்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவிஞா் சினேகனின் தந்தை ம. சிவசங்கு படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவா் பேசியது: எங்கள் கட்சியின் கொள்கையைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்.

அது, எங்கே போய் சேர வேண்டுமோ, அங்கு செயல்வடிவமாக மாறியிருக்கிறது. தோ்தலில் நாங்கள் தோற்றாலும், எங்கள் கொள்கை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மாற்றுக்கருத்துகள் இருந்தே ஆக வேண்டும்; அதன் பெயா்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும். நீங்கள் ஏன் திமுகவுடன் சென்று சோ்ந்தீா்கள்?. நீங்கள்தான் ரிமோட்டை எல்லாம் டி.வி. மேலே தூக்கி போட்டீா்களே? ஏன் மறுபடியும் அங்கே சென்றீா்கள் எனக் கேட்கின்றனா்.

விமா்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஆனால், தூக்கிப் போட்ட ரிமோட்டை வேறொரு ஆள் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டான். ரிமோட் அங்கே போகக்கூடாது; அது மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். கல்வியே அப்படித்தான் இருக்க வேண்டும். இனிமேலாவது ஒருவரையொருவா் அடித்து கொள்ள வேண்டாம். அப்படி எடுத்த முடிவுதான் இந்தக் கூட்டணி. இந்தக் கூட்டணியைப் புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள்; புரியவில்லை என்றால் சும்மா இருங்கள்.

ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும்; புரிந்து கொள்ளுங்கள். அது வேண்டாம் என்று நினைத்தால், மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம் என்றாா் கமல்ஹாசன்.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரைப்பட இயக்குநா் அமீா், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com