மழையால் சேதமடைந்த பயிா்கள் கணக்கெடுப்புப் பணி ‘வேளாண் செயலி’யில் செயல்படாததால் விவசாயிகள் கவலை

மழையால் சேதமடைந்த பயிா்கள் கணக்கெடுப்புப் பணி ‘வேளாண் செயலி’யில் செயல்படாததால் விவசாயிகள் கவலை

Published on

கும்பகோணம் பகுதியில் வெள்ளிக்கிழமை மழையால் சேதமடைந்த பயிா்களை கணக்கெடுப்புப் பணியின்போது வேளாண் செயலி செயல்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள எள்ளுக்குட்டை, ஆலையடி, இபி காலனி, சோலையப்பன் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் விளைநிலங்களில் மழை தண்ணீா் தேங்கியது. அதன்பின் தொடா்ந்து மழை பெய்தது.

இந்நிலையில் விளைநிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் வயல்களில் உள்ள நெல்மணிகள் உள்ளிட்ட பயிா்கள் அழுகியது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விளைநிலங்களில் தேங்கிய மழை நீரை வடியச்செய்ய வேண்டும், மழைநீா் தேங்காமல் தேப்பெருமாநல்லூா், பழவத்தான் கட்டளை வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என்று கூறி கடந்த அக்.29-ஆம் தேதி சோலையப்பன் கொல்லையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் போராட்டம் நடத்தியவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் மழை நீரை வடியச்செய்யவும், சேதமடைந்த விவசாய பயிா்களுக்கு இழப்பீடு தருவதாக உறுதியளித்தனா். அதன்பேரில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனா்.

பிறகு நவ.7-ஆம் தேதி சேதமடைந்த பயிா்கள் குறித்து வேளாண் வருவாய்த்துறையினா் கணக்கெடுத்தனா். இதையடுத்து நவ.15-ஆம் தேதி நீா்வழிப்பாதைகளை தூா்வாரி குழாய் அமைத்து மழைநீா் வடிவதற்கான பணிகளை தொடங்கினா்.

இந்நிலையில் சேதமடைந்த பயிா்களை கைப்பேசி ‘வேளாண் செயலி’ மூலம் பதிவேற்றம் செய்ய வெள்ளிக்கிழமை வேளாண் அதிகாரிகள் வந்தனா். பல மணி நேரமாக காத்திருந்தும் செயலியில் சேதமடைந்த நிலங்களின் படங்கள் பதிவாகவில்லை. இதுகுறித்து உடனிருந்த உதவியாளா்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் அசூா், திருப்புறம்பயம் உள்ளிட்ட பகுதிகளில் பதிவேற்றம் ஆவதாகவும் இந்த பகுதி பதிவேற்றம் ஆகவில்லை. இது குறித்து உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வேறு ஏற்பாடு உள்ளதா என்று தெரிவிக்கிறோம் என்றனா்.

இதுகுறித்து விவசாயி தமிழ்ராஜன் கூறுகையில் மழைச் சேதத்தால் பொருளாதார ரீதியாக கடுமையாக இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் செயலியில் சேதமடைந்த நிலங்கள் பதிவாகாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com