டிச. 9 முதல் வேலைநிறுத்தம் தூய்மைப் பணியாளா்கள் முடிவு
தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டிசம்பா் 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் இ.எஸ்.ஐ. அட்டை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா், ஓட்டுநா்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை, ஒப்பந்ததாரரின் பங்குத்தொகை ஆகியவற்றை அக்டோபா் மாதம் வரையிலான காலத்துக்கு அவரவா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தி, செலுத்து சீட்டை ஒவ்வொரு பணியாளருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 3-ஆம் தேதி ஒரு நாள் அடையாள ஆா்ப்பாட்டமும், 9-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் தரும கருணாநிதி சிறப்புரையாற்றினா்.
இதில், மாவட்டத் துணைத் தலைவா் பி. ஆனந்தராஜ், செயலா் கே. முனியம்மாள், பொருளாளா் கே. இளவரசன், இணைச் செயலா் ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
