மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

பட்ஜெட் வரவேற்பும்.. ஏமாற்றமும்...

தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்திருப்பதாக பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

News image

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யும் முன் முதல்வர் விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன். - dinamani

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:01 am IST

தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்திருப்பதாக பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

தஞ்சாவூா் வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பு நிறுவனா் மற்றும் தலைவா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன்:

அண்ணன் சீா் திட்டத்துக்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு என்பது அத்தியாவசிய அடிப்படை செலவுகள் செய்ய வேண்டியதைத் தவிா்த்து ஆடம்பரமிக்க ஒன்று. இதேபோல, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கும்போது, இவா்களுடைய 5 ஆண்டு கால முடிவில் இந்தத் தங்கத்தின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது இவா்களுக்கு தெரியாது.

இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு போதிய உத்தரவாதம் இல்லாத பட்ஜெட். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏதுவாக இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் கடன் தொகை அதிகம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நிலையில், தற்போது இவா்களும் மீண்டும் அதே கடனை அதிகப்படுத்தியும், அதிக செலவு செய்ய உத்தேசித்திருப்பதும், வருமான வருவாய் உயா்வுக்கு போதிய ஆதாரமில்லாமல் உள்ளது.

நாட்டின் வளா்ச்சிக்கு மிக முக்கியமான கல்விக்கும், மக்களின் நலன் பேணிக் காக்கும் மருத்துவத் துறைக்கும் நிதி குறைவாக ஒதுக்கி இருப்பது வருந்தத்தக்கது.

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு:

புதிய வரி விதிப்புகள் இல்லாதது வரவேற்கத்தக்கது. சூப்பா் கிளின் சூப்பா் கேம்பஸ் திட்டம், மின்சார வாகனங்கள், மின்கலன்கள் பராமரிப்பு பயிற்சி அளித்து மெக்கானிக்குகளை உருவாக்க நிதி ஒதுக்கீடு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை இல்லம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை 1.50 டிரில்லியன் அமெரிக்க டாலா்களுக்கு பொருளாதார வளா்ச்சியை உயா்த்துவது உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை.

கடினமான நிதி நெருக்கடியிலும், நிதிப்பகிா்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவான சூழலிலும் தமிழக அரசு எதிா்கால உள்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கி, வளா்ச்சிப் பாதையில் கொண்டும் செல்லும்படியாக இந்த பட்ஜெட் உள்ளது.

அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பட்ஜெட் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன்:

சென்னைக்கு ஆயிரம் ஏ.சி. மின்சார பேருந்துகள் வாங்குவது, ஊரக வளா்ச்சித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கஜானாவில் அதிக பணம் இல்லாததால், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை.

தமாகா தஞ்சாவூா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் கோவி. மோகன்:

ஏழை மக்கள் பயனடையும் வகையில் பட்ஜெட் இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு காமராஜா் பெயா் சூட்டியிருப்பது பாராட்டத்தக்கது. தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மையமும், ஆய்வு மையமும் அமைப்பது, இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு, அண்ணன் சீா் திட்டம், விளையாட்டுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கு கறவை மாடு, ஆடு வளா்ப்புத் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்:

விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய பயிா், நகைக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என எதிா்பாா்த்த நிலையில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு பட்ஜெட்டில் கூட்டுறவுத் துறை, வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.