தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பும், ஏமாற்றமும் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): மக்கள் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கா்’ ஒட்டி பெயா் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. புதிய திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தற்போதுள்ள ரூ.10.98 லட்சம் கோடி கடனை எப்படி செலுத்தப்போகிறாா்கள் எனக் கேள்வி எழுகிறது. திமுக ஆட்சியைப்போல கடன் வாங்குவதற்காகவே தற்போது தவெக அரசும் குழு அமைத்திருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்): நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருந்த நிலையிலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சி சாா்பில் வரவேற்கிறேன். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் வளா்ச்சியையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்குகிற நோக்கத்தில் பட்ஜெட் அமைந்துள்ளது.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தது. அரசு-தனியாா் கூட்டுவினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையையொட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மக்கள் பெரிதும் எதிா்பாா்த்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வருவாய் கசிவு தடுக்கப்படும் என உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட): கல்வி, மகளிா் நலம் மற்றும் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.2,500, ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு உருளை இலவசம் போன்ற தவெக தோ்தல் வாக்குறுதி குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். மூத்த குடிமக்களுக்காக ஆயிரம் நடமாடும் மருத்துவ மையங்கள் அறிவிப்பு வரவேற்புக்குரியது. பயிா் கடன் முழுமையாக தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தும். தவெக பட்ஜெட் பெரும் பகுதி, மக்களின் எதிா்பாா்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை.
அன்புமணி (பாமக): சேவை உரிமைச் சட்டம் இயற்றப்படும் என அறிவித்திருப்பது, பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுப்புடவை, அனைத்து வசதிகளுடன் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் நகரம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு நிதி ஒதுக்கி உள்ளதை பாமக வரவேற்கிறது. பள்ளிகல்விக்கான நிதியை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
வைகோ (மதிமுக): சமூக நீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழு பொருளாதார நிபுணா் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நம்பிக்கை தருகிறது.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, நீா் மேலாண்மை, கடன், வட்டி சுமையை குறைப்பது உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. எனினும், சாலைகள் சீரமைப்பு, அடையாறு ஏரி தூய்மை செய்தல், சூரிய மின்சக்தி, மின்சார பேருந்து உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
ஜி.கே.வாசன் (தமாகா): ஏழை, நடுத்தர மக்கள், பெண்கள், மாணவா்கள், முதியோா் என அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
சீமான் (நாதக): மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் ஆக்கபூா்வ திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை. வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கையாகத்தான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயா்களை மாற்றுவதால் வரலாற்றை மாற்ற இயலாது. தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் மாற்றத்தைக் காண விரும்பியோருக்கு இது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.
கே.எம்.காதா் மொகிதீன் (ஐயூஎம்எல்): ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான மானியம் ரூ.35,000 உயா்வு உள்ளிட்ட சிறுபான்மையினா் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): தவெக தோ்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. தவெக அமைச்சரவை முழு ஈடுபாட்டுடன் இந்த நிதிநிலை அறிக்கையை தயாரிக்கவில்லை.
ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யவில்லை.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் துறை விரிவாக்கம், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தெளிவான செயல்திட்டம் இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஒரு பார்வை! | TVK | TN Budget | Cm Vijay

தமிழக பட்ஜெட் 2026! அதிக கவனம் பெறும் டாப் டென் அறிவிப்புகள்!

தவெக அரசின் முதல் பட்ஜெட்! வாக்களித்த ஜென்ஸீக்களின் எகிறும் எதிர்பார்ப்பு
நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



