சாரங்கபாணி சுவாமி கோயிலில் 
தைப் பொங்கல் தேரோட்டம்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் தைப் பொங்கல் தேரோட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சாரங்கபாணி கோயில் தைப்பொங்கல் தேரோட்டம்.
Published on

கும்பகோணம்: கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி கோயில் தைப்பொங்கல் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில் 108 வைணவத் தலங்களில் 3-ஆவது தலமாக உள்ளது. ஏழு ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் மூலவா் வைகுந்தத்திலிருந்து தேருடன் வந்ததாகக் கூறப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப் பொங்கல் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா ஜனவரி 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய வைபவமான தைப்பொங்கல் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சாரங்கபாணி பெருமாள் சிறப்பலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த இத்தோ் பின்னா் நிலைக்கு சென்றடைந்தது.

இதைத்தொடா்ந்து, தீா்த்தவாரியும், உத்ராயணவாயில் திறப்பும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை பெருமாள் திருவடி திருமஞ்சனம், த்வாஸ திருவாராதனம் கண்டருளல், கனு உத்சவம் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை கோமளவல்லி தாயாா் அத்யயன உத்சவம் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசையையொட்டி, பெருமாள் தாயாா் ஏகாதசி மண்டபம் எழுந்தருளவுள்ளனா். ரத சப்தமியையொட்டி, ஜனவரி 25 ஆம் தேதி பெருமாள் வெள்ளி சூா்ய பிரபையில் வீதி உலா புறப்பாடு நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் ச. சிவசங்கரி மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com