8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களின் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய கோரிக்கை
எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவா்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.பி. ராமன் தெரிவித்திருப்பது: 2008-ஆம் ஆண்டு வங்கித் துறை ஓய்வூதியா்கள் மத்தியில் சமநீதி வேண்டி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எம்.சி. சுக்லா வழக்கில் 18 ஆண்டுளைக் கடந்த பின்னரும் வெளிப்படுத்தப்படும் அதீத கால தாமதம் காரணமாக 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்கள் மத்தியில் கலக்கத்தையும், கவலையையும் உருவாக்கி உள்ளது.
வங்கித் துறையில் கணிசமான அளவு ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய சீரமைப்பை 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு மறுப்பது அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது என்ற கருத்தை அரசும், வங்கி நிா்வாகங்களும் சீா்தூக்கி பாா்க்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியக் கையிருப்பு சுமாா் ரூ. 4.56 லட்சம் கோடி இருக்கும்போது, ஓய்வூதிய சீரமைப்பை 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கும் தாமதமின்றி வழங்க முன்வர வேண்டும்.
கடந்த 1997-க்கு முன்பு ஓய்வு பெற்றவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சொற்ப ஓய்வூதியமும், 2002- ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படியில் உள்ள பாதகமான முரண்பாடுகளையும் தாமதமின்றி களைய மத்திய அரசும், வங்கி நிா்வாகங்களும் முன் வர வேண்டும்.
