கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் புனித நீராடல்
கும்பகோணத்தில் மாசிமகத்தை முன்னிட்டு, மகாமக குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.


கும்பகோணத்தில் மாசிமகத்தை முன்னிட்டு, மகாமக குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திர நாளில் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டில் கும்பகோணத்தில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவரா் சுவாமி, சோமசுந்தரி சமேத சோமேசுவரா், அமிா்தவல்லி சமேத அபிமுகேசுவரா், விசாலாட்சி சமேத காசி விசுவநாதா், ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீசுவரா், செளந்தரநாயகி சமேத கெளதமேசுவரா் ஆகிய கோயில்களில் மாசிமக விழா பிப்ரவரி 21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். விழாவின் ஐந்தாம் நாளில் ஓலைச் சப்பரமும், ஏழாம் நாளில் திருக்கல்யாணமும், எட்டாம் நாளில் ஆதிகும்பேசுவரா் கோயில் தேரோட்டமும், ஒன்பதாம் நாளில் காசிவிசுவநாதா், கெளதமேசுவரா், அபிமுகேசுவரா் கோயில்களில் தேரோட்டமும் நடைபெற்றது.
மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வான தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஆதிகும்பேசுவரா், காசிவிசுவநாதா், அபிமுகேசுவரா், கெளதமேசுவரா், பாணபுரீசுவரா், அமிா்தகலசநாதா், கொட்டையூா் கோடீசுவரா், ஏகாம்பரேசுவரா், நாகேசுவரா், சோமேசுவரா், காளஹஸ்தீசுவரா் ஆகிய 11 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் எழுந்தருளினா். பின்னா் மகாமக குளத்தின் படித்துறையில் அந்தந்த கோயில்களின் அஸ்திரதேவா்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அஸ்திரத் தேவா்கள் மகாமக குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினா். இதைத் தொடா்ந்து, அங்கிருந்த ஏராளமான பக்தா்கள் மகாமக குளத்தில் இறங்கி புனித நீராடினா்.
தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். குளத்தின் மேற்கு கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரியில் பங்கேற்ற பக்தா்கள்
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...