பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஆட்டோ தொழிலையும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிற பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஆட்டோக்களுக்கு மீட்டா் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களுக்கும் இலவசமாக ஜி.பி.ஆா்.எஸ். கருவி வழங்கப்பட வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற ஊபா், ஓலா, ரேபிடோ இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. தனபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. தாமஸ், மாநகரப் பொருளாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன் தொடங்கி வைத்து பேசினாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா நிறைவுரையாற்றினாா்.
இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கப் பொதுச் செயலா் தங்க. குமரவேல், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் சின்னப்பன், விசிக ஆட்டோ சங்கச் செயலா் தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் யோகராஜ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் அருள், கட்டுமான தொழிலாளா் சங்கச் செயலா் கரிகாலன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க மாநகரச் செயலா் முகமது பக்ருதீன், நிா்வாகிகள் ராஜேந்திரன், திலீப்குமாா், ஜெஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










