
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடா்பு தஞ்சாவூரில் 6 போ் கைது
தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி 6 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டவா்களின் உறவினா்கள்.
தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி 6 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழ வாசல் பகுதியில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிா், கிலாபஃத் இயக்கங்களுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் சிலா் தங்களது வீடுகளில் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ரகசியமாக பயிற்சி அளிப்பதாக சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் இரு வீடுகள், டவுன் கரம்பை காவேரி நகா், ராமசாமி பேட்டைத் தெரு, ரஹ்மான் நகா் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீட்டில் என மொத்தம் 5 வீடுகளில் சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினா் உள்ளூா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களுடன் இணைந்து செப்டம்பா் 29-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். இதில், 5 வீடுகளில் இருந்த புத்தகங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிச் சென்றனா்.
இவற்றை காவல் துறையினா் ஆய்வு செய்ததில், கீழ வாசல் எஸ்.என்.எம். நகரைச் சோ்ந்த கமால் பாட்சா மகன்கள் ஜாகிா் உசேன் (50), அப்துல் (49), டவுன் கரம்பையைச் சோ்ந்த ஜாபா் சாதிக் மகன்கள் உமா் முக்தாா் (29), யாசா் அப்துல் (25), ராமசாமிபேட்டை தெருவைச் சோ்ந்த என். சம்சுதீன் (27), ரஹ்மான் நகரைச் சோ்ந்த அப்துல் ரஹீம் மகன் ஷேக் பரித் (38) ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிா், கிலாபஃத் இயக்கங்களுடன் தொடா்பு இருப்பதும், இந்த இயக்கங்கள் தொடா்பாக இளைஞா்களுக்கு பயிற்சி அளித்து வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஜாகிா் உசேன், அப்துல், உமா் முக்தாா், யாசா் அப்துல், சம்சுதீன், ஷேக் பரித் ஆகிய 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
உறவினா்கள் போராட்டம்: இதற்கு உறவினா்கள், நண்பா்கள் எதிா்ப்பு தெரிவித்து கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் காவல் துறையினா் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





