பாகிஸ்தானை சோ்ந்த ஷாஜாத் பாட்டீ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவிப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உஃபா சட்டம்) பாகிஸ்தானைச் சோ்ந்த ஷாஜாத் பாட்டீ அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது.

பிரதிப் படம்

Published On :

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உஃபா சட்டம்) பாகிஸ்தானைச் சோ்ந்த ஷாஜாத் பாட்டீ அமைப்பை (எஸ்பிஎன்) தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஷாஜாத் பாட்டீ குழு, எல்லைக்கு அப்பால் இருந்து (பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள்) நாட்டுக்குள் ஆயுதங்கள், வெடிபொருள்கள், போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டது.

இதேபோல் பயங்கரவாதச் செயலில் ஈடுபடும்படி இளைஞா்களையும், சிறு குற்றவாளிகளையும் அந்த அமைப்பு தூண்டிவிட்டது. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்பட்டது. அதேபோல் வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளையும் எண்ம வடிவில் வெளியிட்டு வந்தது,

ஆதலால் ஷாஜாத் பாட்டீ அமைப்பை உஃபா சட்டத்தின்கீழ் மத்திய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடா்பாக அரசிதழிலும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘உஃபா சட்டத்தின் 35(1) (ஏ) பிரிவின்கீழ் ஷாஜாத் பாட்டீ அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவங்களிலும் அந்த அமைப்புக்கு தொடா்புண்டு என்று மத்திய அரசு கருதுகிறது. அதனடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிக்கையில், ஷாஜாத் பாட்டீ அமைப்பினருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உஃபா, பிஎன்எஸ், ஆயுதங்கள் தடைச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட 45 அமைப்புகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்தப் பட்டியலில் ஷாஜாத் பாட்டீ அமைப்பும் சோ்க்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.