/

விலகியது தடை: மீண்டும் பரபரப்பான முக்கிய வீதிகள்!

திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கியிருந்த நடவடிக்கை சனிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மாநகரின் முக்கிய வீதிகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

News image

25dopen1a052439

Updated On :25 ஜூலை 2020, 3:26 pm

DIN

திருச்சி: திருச்சி மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க மூன்று வாா்டுகளை முழுமையாக முடக்கியிருந்த நடவடிக்கை சனிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மாநகரின் முக்கிய வீதிகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளவையாகத் தொடா்ந்து புகாா்கள் வந்த பகுதிகளை 14 நாள்களுக்கு முழுமையாக முடக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, கடந்த 10-ஆம் தேதி 16, 17, 18 ஆகிய வாா்டுகளை திருச்சி மாநகராட்சி முடக்கியதால் மேலரண்சாலையில் ஜாபா்ஷா தெரு முதல் பழைய பாஸ்போா்ட் அலுவலகம் வரையுள்ள குறுக்கு சாலைகள் அடைக்கப்பட்டன. இதேபோல, பெரிய கடைவீதியில் கமான் வளைவு முதல் கள்ளத்தெரு வரையிலும் மூடப்பட்டன.

இதனால் ஜின்னா தெரு, பெரியகம்மாளத் தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு, சின்னசெட்டித் தெரு, பெரிய செட்டித் தெரு, வெள்ளை வெத்தலைக்காரத் தெரு, பந்தல்கானா தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி மறுக்கப்பட்டது.

சாலையின் தொடக்கம், முடிவு மற்றும் இதர அனைத்து வழித் தடங்களையும் சவுக்கு கம்புகள், இரும்புத் தகடுகளைக் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் அடைத்து வைத்திருந்தது.

சனிக்கிழமை இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், வெள்ளிக்கிழமை இரவே தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. சனிக்கிழமை அதிகாலை முதல் அனைத்து வீதிகளும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டன. அந்தந்தப் பகுதி பொதுமக்களுக்கும் வெளியேற அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் இந்த வீதிகள் பரபரப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்த வீதிகளில்தான் மளிகை, ஜவுளி, பாத்திரம், விளையாட்டுப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், நாட்டு மருந்து உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் கிடைக்கும். மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக் கடைகள் உள்ளதால் இந்த வீதிகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். கடந்த 15 நாள்களாக யாரும் உள்ளே செல்ல முடியாமலும், வெளியேற முடியாமலும் முடங்கியிருந்தனா். தற்போது தடை விலகியுள்ளதால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

Image Caption

தடைக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட பெரியகடைவீதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.