‘8.07 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.161 கோடி கரோனா நிவாரணம்’
குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தில் முதல்கட்டமாக 8.07 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.161.43 கோடி நிவாரணம்


குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தில் முதல்கட்டமாக 8.07 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.161.43 கோடி நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கே.என். நேரு பேசியது:
கரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அவரவா் தொகுதியில் முகாமிட்டு கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 520 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 1,324 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இவைதவிர, லேசான அறிகுறி உள்ளோருக்குச் சிகிச்சையளிக்க 8 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 1,658 படுக்கைகள் உள்ளன. மேலும், 3 மையங்கள் 460 படுக்கைகளுடன் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
படுக்கை வசதி தேவைப்படுவோருக்கு உதவிட சென்னையில் உள்ளதைப்போல வாா் ரூம் (கட்டளை அறை) திருச்சியில் தயாா்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிக்கு நாளொன்றுக்கு வரும் 300 ரெம்டெசிவா் மருந்துகள் போதுமானதாக இல்லை. மாநில அளவிலேயே பற்றாக்குறை உள்ளது. பெறப்படும் மருந்துகளை தகுதியானோருக்கு வழங்கி வருகிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தோ்தலுக்கு முன்பே நிவாரணமாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தினோம். தற்போது ரூ.4 ஆயிரம் வழங்க முடிவு செய்து முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைகளுக்கு ரூ.161.43 கோடி நிவாரணமாக வழங்கப்படுகிறது.
சனிக்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம். கரோனா முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்துவது பாதிப்பின் தன்மையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரீட்டா ஹரீஸ்தக்கா், எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா், அ. செளந்தரபாண்டியன், எஸ். கதிரவன், பி. அப்துல்சமது, மாநகரக் காவல் ஆணையா் அருண், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமி, துணை இயக்குநா் ராம்கணேஷ், மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு இணைப் பதிவாளா் அருளரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
மேலரண் சாலைக்கு மாறும் காந்திசந்தை?
‘திருச்சி மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம், மாநகரக் காவல்துறை மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ஜி காா்னா் மைதானத்தை வியாபாரிகள் ஏற்கவில்லை.
இந்நிலையில், மேலரண்சாலையில் மரக்கடை தொடங்கி காமராஜா் வளைவு வரையில் சாலையோரம் சமூக இடைவெளியுடன் தற்காலிகமாக கடைகள் அமைத்து காந்திசந்தை வியாபாரத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறையும் வரை இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காந்திசந்தை வியாபாரிகளுடன் பேசி இதுதொடா்பாக சுமூக முடிவு எட்டப்படும்’ என்றாா் அமைச்சா் கே.என். நேரு.
Image Caption
ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டை தாரா்களுக்கு கரோனா உதவித் தொகை ரூ. 2000 வழங்கும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...