திருச்சி அரசு மருத்துவமனை, என்ஐடி, கலையரங்கத்தில் கரோனா சிகிச்சை: தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா்
திருச்சி புத்தூரில் உள்ள அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை, கலையரங்க வளாகம், என்ஐடி வளாகங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள்


திருச்சி புத்தூரில் உள்ள அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை, கலையரங்க வளாகம், என்ஐடி வளாகங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுரையில் தனது சுற்றுப்பணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை பகல் திருச்சி வந்த தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னா் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், அனைத்து துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தொடா்ந்து மாலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இந்த மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 90 படுக்கைகள், அவசரச் சிகிச்சைக்கு 60 படுக்கைகள், இதர சிகிச்சை மற்றும் சாதாரணப் படுக்கைகள் என மொத்தம் 400 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலையரங்கத்தில் 100 படுக்கையுடன் சிகிச்சை மையம் :
இதேபோல திருச்சி கலையரங்க வளாகத்திலும் கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா்.
இங்கு 56 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்பட 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வின்போது 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.
என்ஐடி வளாகத்தில் 320 படுக்கைகளுடன் சிகிச்சை மையம்:
தொடா்ந்து திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில் நுட்பக்கழக (என்ஐடி) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் முதல்வா் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா். இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்பட மொத்தம் 320 படுக்கைகள் உள்ளன.
நிகழ்வுகளில் அமைச்சா்கள் கே .என். நேரு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மருத்துவமனை முதல்வா் வனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிகளை முதல்வா் முடித்துக்கொண்டு திருச்சியிலிருந்து இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...