திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 78-ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக.13 தொடங்கி தொடா்ந்து 5 நாள்களுக்கு 5 அடுக்குகள் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், விமானநிலையக் காவல்துறையினா், மாநகரக் காவல்துறையினா் இணைந்து தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மோப்ப நாய்கள் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா். பாா்வையாளா்களுக்கு தடை அமலில் உள்ளது. முக்கிய பிரமுகா்களை வரவேற்க வருபவா்களுக்கு வழங்கப்படும் அனுமதிக்கும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். மேலும், விமானப் பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு ரயில் நிலையம்: திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்திலும் தீவிர சோதனைக்குப் பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் இணைந்து பயணிகள் உடைமைகள் முழுமையாக சோதனை செய்த பிறகே ரயில்நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து நடைமேடைகளிலும் மோப்ப நாய் உதவியுடன் ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கப்படுகிறது. திருச்சிக்கு வந்து செல்லும் ரயில்களிலும் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தப்படுகிறது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை என 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

