/

சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி: சிறப்பு உதவி ஆய்வாளா் தப்பினாா்

திருச்சியில் போலீஸாரின் சோதனை சாவடிக்குள் கனரக லாரி புதன்கிழமை புகுந்த விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

News image

திருச்சி குடமுருட்டி பாலம் அருகே சோதனைச் சாவடிக்குள் புதன்கிழமை புகுந்த லாரி.

Updated On :9 அக்டோபர் 2024, 7:01 pm

Din

திருச்சியில் போலீஸாரின் சோதனை சாவடிக்குள் கனரக லாரி புதன்கிழமை புகுந்த விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

கோவையில் இருந்து திருச்சி நோக்கி புதன்கிழமை காலை வந்த கனரக லாரியை பெரம்பலூா், குன்னம் வட்டத்தை சோ்ந்த சுகுமாா் என்பவா் ஓட்டி வந்தாா். திருச்சி-கரூா் சாலையில் குடமுருட்டி பாலம் அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த காவல் சோதனைச் சாவடிக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் சோதனைச் சாவடி பலத்த சேதம் அடைந்த நிலையில், அதற்குள் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா். இருப்பினும் காயமின்றி அவா் தப்பினாா். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த கோட்டை போலீஸாா் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி, லாரி ஓட்டுநா் சுகுமாரிடம் நடத்திய விசாரணையில், அரியலூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கோவையில் இறக்கிவிட்டுத் திரும்பும் வழியில் அவா் கண் அயா்ந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.