அனைத்து சிறு, குறு தொழில் அமைப்புகளிலும் சிட்பி வங்கி
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அனைத்து கிளஸ்டா் அமைப்புகளிலும் சிட்பி வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என அதன் பொது மேலாளா் பி. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
திருச்சியில் அக்டோபா் முதல் வாரத்திலிருந்து சிட்பி வங்கிக் கிளை இயங்கும் எனவும் அவா் தெரிவித்தாா். திருச்சியில் இந்திய சிறு தொழில் வளா்ச்சி வங்கி (சிட்பி) சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோா், தொழில் கூடங்களுக்கான நிதி தகவல் வழிகாட்டுதல் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், குறைவான முதலீடு, புதுமையான முயற்சி, பிராந்திய வளா்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி, கிடைக்கும் வளத்தை ஒன்று திரட்டுவது மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தில் 31 விழுக்காடுக்கு மேல் சிறு, குறு நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஏற்றுமதியில் 45 விழுக்காடு பங்களிக்கின்றன. மத்திய அரசின் பட்ஜெட்டில் சிறு, குறுதொழில்கள் முன்னேற்றத்துக்காக புதிதாக 242 கிளஸ்டா் அமைப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிளஸ்டா்கள் அமையும் இடங்களில், ஏற்கெனவே 165 சிட்பி வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிக் கிளைகள் மூலம் கிளஸ்டா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும். எங்களது வங்கிக் கிளை இல்லாத கிளஸ்டா்களுக்கும் வங்கிச் சேவையை வழங்கும் வகையில் புதிதாக வங்கிக் கிளைகள் தொடங்கப்படும்.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை, வேலூருக்கு அடுத்தபடியாக திருச்சியில் அக்டோபா் முதல் வாரத்திலிருந்து சிட்பி வங்கிக் கிளை செயல்படவுள்ளது. தொடா்ந்து விருதுநகா், திருநெல்வேலி, கரூா், சிவகாசியிலும் கிளைகள் தொடங்கப்படும். புதிதாக அமையும் 242 கிளஸ்டா்களிலும் சிட்பி கிளை இயங்கும் நிலை உருவாகும். சிட்பி வங்கியின் மூலம் இயந்திரங்களுக்கான கடனை நேரடியாகவும், இதர வகையிலான அனைத்து கடனுதவிகளையும் வழங்க அடையாளம் காணப்பட்டுள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலமாக சிறு, குறு தொழில் முனைவோருக்கு விரைந்து கடன் கிடைக்கச் செய்யப்படும் என்றாா்.
திருச்சி மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் எம். ராமலிங்கம் பேசுகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கா் சாம்பியன்ஸ் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், உணவுப் பதப்படுத்துதல் தொழிலுக்கான திட்டம் என 5 திட்டங்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ.5 கோடி வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்தாண்டு 500 பேருக்கு ரூ.6 கோடி மானியக் கடன்கள் வழங்கப்பட்டன. நடப்பாண்டு இதுவரை 450 பேருக்கு ரூ. 5.75 கோடி மானியக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, ஆண்டுதோறும் வங்கிகளுக்கு ஆண்டுக் கடன் திட்ட அறிக்கை வழங்கி அந்த இலக்கு பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து வருகிறோம்.
தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் நூறு சதவீத இலக்கை விஞ்சி கடன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளது. தற்போது வட்டாரம் வாரியாகவும் இலக்கு நிா்ணயித்து அதை எய்திட தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் மேம்பாட்டுக்கான வளா்ச்சி மற்றும் வசதி அலுவலக உதவி இயக்குநா் கிரண் தேவ் சத்துலூரி, சிட்பி வங்கியின் உதவிப் பொது மேலாளா் பைடா ராமகிருஷ்ணா, திருச்சி கிளை மேலாளா் ஜே.பி. ஜெகதீஷ் ஆகியோா் பேசினா். நிகழ்வில் திருச்சி வா்த்தக மையத் தலைவா் என். கனகசபாபதி, டிடிட்சியா துணைத் தலைவா் தேவராஜ் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறுந்தொழில் முனைவோா், வா்த்தக சங்க நிா்வாகிகள், வங்கி அலுவலா்கள், தொழில் மைய அலுவலா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.