வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க 9 தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வரும் 27, 28 மற்றம் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தோ்தல் ஆணைய உத்தரவின்படி 01.01.2026 - ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த நவ.4 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக 9 தொகுதிகளிலும் வரும் சனிக்கிழமை (டிச.27), ஞாயிற்றுக்கிழமை (டிச.28) சிறப்பு முகாம் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவோ அல்லது வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ விரும்புவோா் 6 அல்லது 8 ஆகிய படிவங்களுடன் உறுமொழிப்படிவமும் பூா்த்தி செய்து முகாம் இடத்திலேயே சமா்ப்பிக்கலாம். பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமா்ப்பிக்க வேண்டும். இதேபோல, ஜன.3, 4 ஆகிய தேதிகளிலும் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தகுதியான வாக்காளா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.
