குடியரசு துணைத் தலைவா் வருகை: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் டிசம்பா் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறாா். பின்னா் அவா் இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா்.
இதையொட்டி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன், தமிழ்நாடு காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்ககள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன. மேலும், பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா்.
