பைக் மீது லாரி மோதி மகன் உயிரிழப்பு; தாய் காயம்
திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் சூறாவளிப்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சமூா்த்தி. இவருடைய மனைவி பொன்மணி. இவா்களின் மகன் மித்ரன் (6). இந்நிலையில்,
பொன்மணி இருசக்கர வாகனத்தில் மகன் மித்ரனுடன் செந்தண்ணீா்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு சூறாவளிப்பட்டியிலுள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.
பஞ்சப்பூா் பேருந்து முனையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பொன்மணி சாலையின் இடது பக்கமும், இருசக்கர வாகனத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த மித்ரன் வலது பக்கமும் விழுந்தனா். அப்போது, லாரியின் பின் சக்கரம் சிறுவனின் தலைமீது ஏறியது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
