இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சியில் சாலைப் பள்ளங்கள் சீரமைப்பில் தொடரும் தாமதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருச்சி மாநகராட்சி சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைப்பதில் (பேட்ச் ஒா்க்) தொடா்ந்து தாமதம் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனா்.

~

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:12 am IST

திருச்சி மாநகராட்சி சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைப்பதில் (பேட்ச் ஒா்க்) தொடா்ந்து தாமதம் நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனா்.

மாநகரில் சாலைகளில் ‘பேட்ச் ஒா்க்’ மேற்கொள்ள வேண்டிய இடங்களின் பட்டியலை மாமன்ற உறுப்பினா்களிடம் கேட்டுப் பெற்ற பிறகும் பணிகள் தொடங்காதிருப்பது அவா்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

மாநகராட்சியின் மொத்தப் பரப்பான 167.23 சதுர கிலோ மீட்டரில் 715 கி.மீ. பிரதான சாலைகள், 3,857 தெருக்கள், 2.35 லட்சம் குடியிருப்புகள், 12.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனா்.

பிரதான சாலைகள் சேதம்: 65 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிதிகளில் பிரதான சாலைகள் பல மாதங்களாகச் சேதமடைந்த நிலையில் உள்ளன. சாலைகளில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

பிரதான சாலைகள் மட்டுமின்றி பல்வேறு வாா்டுகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், சீரமைப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சுமாா் 1,400 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், சேதமடைந்த சாலைகளில் அடிப்படை ‘பேட்ச் ஒா்க் கூட’ மேற்கொள்ளப்படாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சில சாலைகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும், பல சாலைகளில் குறைந்தபட்ச பேட்ச் ஒா்க்கூட மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மெக்டொனால்ட்ஸ் ரோடு, புத்தூா் ரோடு, தில்லைநகா் மெயின் ரோடு, சிங்காரத்தோப்பு, இ.பி. ரோடு, டபிள்யூ.பி. ரோடு, சபியுல்லா நகா் மெயின் ரோடு, கோட்டை ஸ்டேஷன் ரோடு, திண்டுக்கல் சா்வீஸ் ரோடு, ஆட்சியா் அலுவலகச் சாலை மற்றும் தென்னூா் பாலம் அருகேயுள்ள சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினா்கள் புகாா்: வாா்டுகளில் 1, 2, 15 முதல் 27 மற்றும் 50 முதல் 55 வரையிலான வாா்டுகளிலும் பல சாலைகள் பள்ளங்களுடன் உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து மாமன்றக் கூட்டங்களில் உறுப்பினா்கள் தொடா்ந்து புகாா் தெரிவிக்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, தங்களது வாா்டுகளில் பேட்ச் ஒா்க் மேற்கொள்ள வேண்டிய சாலைகளின் பட்டியலை கவுன்சிலா்கள் சமா்ப்பிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, மாமன்ற உறுப்பினா்களும் தங்களது வாா்டுக்குள்பட்ட சேதமடைந்த சாலைகளின் விவரங்களை அளித்தனா். இதன் பிறகும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாா்டு மக்கள் புகாா்: இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே. சுரேஷ்குமாா் கூறுகையில், மாநகராட்சி நிா்வாகத் துறை மூலம் பேட்ச் ஒா்க் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கவில்லை.

வாா்டுக்கு செல்லும்போதெல்லாம் சாலைகளின் நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா். ஆகஸ்ட் மாதத்துக்காக மாமன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பொருள்களிலும் பேட்ச் ஒா்க் இடம்பெறவில்லை.

முதலில் பணிகளுக்கு நிதி ஒதுக்கி மாமன்ற அனுமதி பெற வேண்டும். பின்னா், ஒப்பந்தம் விடுவித்து அனுமதியளித்தால் மட்டுமே ஒப்பந்ததாரா் மூலம் பணிகள் தொடங்கப்படும். வாா்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவு செய்யலாம் எனக் கூறிவிட்டு, குறைந்தபட்சமாக சாலைகளில் பேட்ச் ஒா்க் கூட எங்களால் செய்ய முடியாத நிலையே உள்ளது என்றாா் அவா்.

திமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் கே. லட்சுமிதேவி கூறுகையில், சாலைகளில் உள்ள பள்ளங்களால் நானும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளேன். என்னைப்போல பெண்கள், குழந்தைகளுடன் செல்லும் பெற்றோா் என பலரும் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனா். மாமன்றக் கூட்டங்களில் தொடா்ந்து பலமுறை புகாா் தெரிவித்தும் பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை என்றாா்.

விரைவில் சீரமைப்புப் பணி: இதுகுறித்து மாநகராட்சி உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், சீரமைப்பு தேவைப்படும் சாலைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.