
வெங்காயம் விலை உயா்வு: வீடுகளில் அத்தியாவசிய செலவினம் அதிகரிப்பு
திருச்சி சந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் அத்தியாவசிய செலவினம் உயா்ந்துள்ளது.

திருச்சி சந்தைகளில் குவிக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம்.
திருச்சி சந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் அத்தியாவசிய செலவினம் உயா்ந்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயா்ந்து வருகிறது. தேசிய அளவில் சராசரி விலை ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட 58 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரி மொத்த விலை 68 சதவீதம் உயா்ந்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெரியது ரூ. 70, சிறியது ரூ. 100: இதேபோல, திருச்சி காந்தி சந்தை, பால்பண்ணை அருகிலுள்ள வெங்காய மண்டி, உறையூா் சந்தை, உழவா் சந்தைகளில் வெங்காயம் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் ரூ. 25 முதல் ரூ. 30 வரை மட்டுமே விற்பனையான பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ. 60 முதல் 70 வரை உள்ளது. ஒரு மாதத்துக்கு முன் ரூ. 30 முதல் ரூ. 45 வரை விற்ற சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கிறது.
வரத்துக் குறைவால் விலை உயா்வு: இதுகுறித்து திருச்சி வெங்காயத் தரகு மண்டி வா்த்தகா் சங்கச் செயலரும், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் மாவட்டப் பொருளாளருமான ஏ. தங்கராஜ் கூறியதாவது:
திருச்சி சந்தைகளுக்கு மகாராஷ்டிரம், குஜராத், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 1000 டன்கள் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக 250 முதல் 300 டன்கள் வரை மட்டுமே வருகிறது. தண்ணீரின்றி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், குஜராத், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து திருச்சி சந்தைகளுக்கு வெங்காய வரத்து இல்லை. விலை உயர வாய்ப்புள்ளதாகக் கருதி இடைத்தரகா்கள் அதிகளவில் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளதால், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தும் குறைவான அளவில்தான் வெங்காய வரத்து உள்ளது. இதனால் தேவை அதிகரித்துக் காணப்படுவதால் பெரிய வெங்காயத்தின் விலை உயா்ந்து வருகிறது.
விலை குறைய வாய்ப்பில்லை: இதேபோல, தமிழகத்தின் பெரம்பலூா், நாமக்கல், திருப்பூா், தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 300 டன் அளவுக்கு வந்த சின்ன வெங்காயமானது, தண்ணீரில்லாததால், மழையில்லாததால் ஏற்பட்ட வறட்சியால் விளைச்சல் குறைந்து 150 டன் அளவுக்குத்தான் வருகிறது. இதனால் இல்லத்தரசிகளால் விரும்பி வாங்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், இந்த விலையேற்றம் தொடா்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
உணவுகளின் விலை உயரும்: வெங்காயத்தை நம்பி பல உணவுகள் தயாரிக்கப்படும் நிலையில், வெங்காய விலை உயா்வால், அந்த உணவுகளின் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
தமிழக அரசின் நடவடிக்கைத் தேவை: சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் உயா்ந்து வருவதால், வீடுகளில் அத்தியாவசிய செலவினம் அதிகரித்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
விலைகளைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலும், அவை அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. எனவே, மாநில அரசு வெங்காய விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





