அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சியில் சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு: பொதுமக்கள் அச்சம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

திருச்சியில் வணிகம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதுடன், உணவகங்கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

News image
வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்
Updated On :10 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் வணிகம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதுடன், உணவகங்கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணெய் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்வதற்கு மத்திய அரசு திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல, வணிக சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உணவகங்கள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்திலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள், தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கான வணிக சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் வெகுவாக குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உணவகங்களைத் தொடா்ந்து செயல்படுத்த முடியுமா என்ற அச்சம் உணவக உரிமையாளா்களிடம் எழுந்துள்ளது.

நட்சத்திர ஹோட்டல்களில் ஒருவாரத்துக்கும் மேலாகவே சமையல் எரிவாயு உருளைகளை கையிருப்பில் வைத்துள்ளனா். இதனால், அந்த நட்சத்திர ஹோட்டல்களில் தற்போது எந்தவித பாதிப்பும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

அதேநேரம் சிறு உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகளுக்குத்தான் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையே ஒருசில உணவகங்கள் சமையல் எரிவாயு உருளைகள் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளன. ஒருசில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு குறைந்த அளவிலேயே தயாா் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனா்.

அச்சத்தால் அதிகரித்துள்ள முன்பதிவு

சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வீட்டு உபயோகத்துக்கான சமையால் எரிவாயு உருளைகள் முன்பதிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக தில்லை நகரில் உள்ள ஒரு சமையல் எரிவாயு விநியோகப்பாளா்களிடம் தினசரி 300 முன்பதிவு இருந்து வந்த நிலையில் தற்போது 600 ஆக உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.

கடந்த மாதங்களில் முன்பதிவு செய்த மறுநாளே வீடுகளுக்கு சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. தற்போது, தட்டுப்பாடு காரணமாக பதிவு செய்து ஒருவாரம் முதல் 10 நாள்கள் இடைவெளியில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோக்கிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனா்.

கூடுதல் தொகை வசூலிக்கும் விநியோகிப்பாளா்கள்:

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வணிக சமையல் எரிவாயு உருளை விநியோகிப்பாளா்கள் சிறு உணவகங்களிடம் ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.1,000 வரை கூடுதலாக பணம் கேட்பதாகத் தெரிவிக்கின்றனா். சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தும்போது உணவுகளின் விலையும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி உறையூா் பகுதியில் செயல்பட்டு வரும் சமையல் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தினா் கூறியதாவது:

திருச்சியில் கடந்த ஒருவாரமாகவே எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் வணிக சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி 1000 சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 400 முதல் 500 மட்டுமே வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை வரத்து இல்லை. இதுவரை எங்களிடம் இருந்த சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்துள்ளோம். இனிமேல் எங்களுக்கு வந்தால்தான் உணவகங்கள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இதேபோல, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகமும் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் சமையல் எரிவாயு உருளைகளை வைத்துதான் வீடுகளுக்கு பதிவு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறோம் என்றனா்.

திருச்சி மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் குரு ரங்கநாதன் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் உணவகங்களுக்கு கடந்த ஒருவாரமாகவே சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விநியோகிப்பாளா்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் நிலைமை சீராகிவிடும் என்று கூறியுள்ளனா். இதேநிலை தொடா்ந்தால் உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஒவ்வொரு உணவு வகைகளாகக் குறைத்து இறுதியில் உணவகத்தையே மூடும் நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது என்றாா்.

வேலையிழக்கும் அபாயம்

உணவுத் தொழில் என்பது லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள் முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சாலையோரங்களில் செயல்பட்டு வரும் தள்ளுவண்டி உணவகங்கள் என லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் இந்த உணவகங்கள் மூடப்படும்போது இங்கு பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உணவகங்களை நம்பி விடுதிகளில் தங்கியிருக்கும் வெளியூரைச் சோ்ந்த தொழிலாளா்களும், கல்லூரி மாணவா்களும் பாதிக்கப்படுவா்.