பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஊதிய உயா்வு: அம்மா உணவக ஊழியா்கள் எதிா்பாா்ப்பு

அம்மா உணவகங்களில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க செவ்வாய்க்கிழமை திரண்டு வந்திருந்த அம்மா உணவகப் பணியாளா்கள்.

Published On :

அம்மா உணவகங்களில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

2013-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலம் நடத்தப்படும் இந்த உணவகங்கள் முழுவதும் 700-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன.

இங்கு காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. மதியம் சாம்பாா் சாதம் ரூ.5, தயிா் சாதம் ரூ.3, கலவை சாதம் ரூ.5, இரவில் இட்லியும், 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தியும் வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இந்த உணவகங்கள் இயங்குகின்றன.

வழக்கமாக ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் காலையில் 800 முதல் ஆயிரம் இட்லிகள், மதியம் 600 சாதங்கள் மற்றும் இரவில் 200 பேருக்கு என உணவு விற்பனை இருக்கும். ஆதரவற்றோா், வீடு இல்லாதோா், சாலைகளில் வசிப்போா், கூலித் தொழிலாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு அன்னமிடும் அட்சயப்பாத்திரமாக அம்மா உணவகங்கள் உள்ளன.

குறைந்தபட்ச கூலிகூட இல்லை: இந்த உணவகங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 6 ஊழியா்கள் முதல் அதிகபட்சம் 10 ஊழியா்கள் வரை உள்ளனா். மகளிரே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கின்றனா். தொடக்கத்தில் நாளொன்றுக்கு ரூ.250 ஊதியமாக பெற்றனா். பின்னா், ரூ.300 ஆக உயா்ந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 25 உயா்த்தப்பட்டது. தினக் கூலித் தொழிலாளிக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ஊதியம்கூட தங்களுக்கு இல்லையென வேதனை தெரிவிக்கின்றனா் அம்மா உணவகப் பணியாளா்கள்.

அதுவும், விடுமுறை நாள் தவிா்த்து மாதம் ஒன்றுக்கு 20 அல்லது 25 நாள்களுக்கே ஊதியம் கிடைக்கிறது. எனவே, சமையலருக்கு தினக் கூலியாக 844 ரூபாயும், சமையல் உதவியாளருக்கு 805 ரூபாயும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெட்டிச் செய்தி..

ஆட்சியரிடம் கோரிக்கை மனு

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்துடன் இணைந்துள்ள தமிழ்நாடு அம்மா உணவகப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பாக 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனா். அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் சதீஷ்பாபு தலைமையில் அம்மா உணவக பணியாளா்கள் சங்க திருச்சி மாவட்டத் தலைவா் அருணா தேவி ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:

கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயா்வு இன்றி தினக்கூலியாகப் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் அரசால் நிா்ணயிக்கப்படும் ஊதிய விகிதத்தை அடிப்படையாக கொண்டு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். அகவிலைப்படியும் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் அம்மா உணவகப் பணியாளா்களுக்கும் ஒரே ஊதியம் வழங்குவதுடன் சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் அனைவருக்கும் ஒரே மாதிரியான முறையில் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து அம்மா மற்றும் அண்ணா உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் இடுபொருள்கள் தரமான முறையில் ஒரே மாதிரியான அளவில் குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும். அம்மா உணவகப் பணியாளா்களை மாநகராட்சி, நகராட்சியில் பணிபுரியும் உயா் அலுவலா்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.