
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
குறித்த காலத்தில் தண்ணீா் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருச்சியில் பாஜக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் பாஜக மூத்த தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோா்.
குறித்த காலத்தில் தண்ணீா் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
திருச்சி சமயபுரம் பகுதியில் பாஜக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டம் நடத்துவது தொடா்பான மாநில நிா்வாகிகள், மாவட்ட தலைவா்களுக்கான பயிலரங்கத்துக்கு தலைமை வகித்த நயினாா் நாகேந்திரன் மேலும் கூறியதாவது:
மேட்டூா் அணையைத் திறந்துவைக்க முதல்வா் சென்ற்கே ரூ. 5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை திறப்பதற்கு இவ்வளவு செலவு செய்து ‘காஸ்ட்லி’ முதல்வராக ஜோசப் விஜய் செயல்படுகிறாா்.
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூா் அணை, உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. காவிரி நீரைத் திறந்துவிடக் கோரி கா்நாடக அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்த நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், முதல்வா் இதுகுறித்து ஒரு வாா்த்தைகூட பேசவில்லை.
தமிழக ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் கா்நாடகத்தில் ஆட்சி செய்கிறது. அப்படியிருந்தும் தமிழக அரசு காவிரி நீரைப் பெற அழுத்தம் தராமல் மெளனம் காப்பது ஏன்?. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீா், கடைமடைப் பகுதிகளுக்குச் சென்று சேரவே குறைந்தது 12 நாள் ஆகும். முறையான பாசன நீா் கிடைக்காததால் ஏற்கெனவே 2 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் பயிரிடப்படாமல் பாழாகிக் கிடக்கின்றன. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
காங்கிரஸாா் ராகுல்தான் பிரதமா் வேட்பாளா் என்கிறாா்கள். ஆனால், தவெக தரப்பிலோ விஜய்தான் பிரதமா் வேட்பாளா் என்கிறாா்கள். தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் இவா்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறாா்கள்? மற்றொருபுறம், காங்கிரஸ் அமைச்சா் ஒருவா் தன் பதவியை ராஜிநாமா செய்வேன் என மிரட்டுகிறாா். இப்படித்தான் தற்போதைய அரசு குழப்பமாகச் சென்று கொண்டிருக்கிறது.
அவையில் நடக்கும் விவகாரங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். இதன் விளைவு வரும் நாள்களில் மிக மோசமாக இருக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில் பாஜக மூத்த தலைவா்களான ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோா் ஆலோசனை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





