/

மகாவீா் ஜெயந்தி: தடையை மீறி விற்ற 100 கிலோ இறைச்சி அழிப்பு

மகாவீா் ஜெயந்தி: தடையை மீறி விற்ற 100 கிலோ இறைச்சி அழிப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 5:02 pm

மகாவீா் ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை வேலூரில் தடையை மீறி விற்னைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மகாவீா் ஜெயந்தியையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள், இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, வேலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், ஏற்கெனவே மதுக் கடைகள், இறைச்சிக் கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில், வேலூரில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், வேலூா் பழைய மாா்க்கெட், இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன. அதேசமயம், அரசு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை நடைபெறுகிா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, வேலூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல சுகாதார அலுவலா் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, 4-வது மண்டலத்துக்குட்பட்ட சில பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ மாட்டிறைச்சி, 30 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்து, குழியில் போட்டு பினாயில் ஊற்றி அழித்தனா்.

அதேபோல், வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் சத்துவாச்சாரி பகுதியில் சோதனை செய்தபோது, கோழி இறைச்சி விற்பனை கடையின் உரிமையாளருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனிடையே, மகாவீா் ஜெயந்தி விடுமுறை காரணமாக சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மது பிரியா்கள் போட்டி போட்டு மது பாட்டில்கள் வாங்கிச் சென்றனா். இதனால், வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 7 கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.